இந்திய யோக மரபு, இயற்கை வேளாண்மை, சூழலியல் குறித்த சிந்தனைகள்
நூல் பக்கங்கள்: 347
இயற்கையோடு இயைந்த மனச்சமநிலை வாய்க்கப்பெறுவதையே இந்திய மரபு யோக வாழ்வு என்கிறது.
அன்றாடம் கவனத்தைத் திசைதிருப்பும் விதமான எண்ணற்ற இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சவால் மிகுந்த நிலையில் உள்ள நவீன காலத்து மனிதனால் யோகம் புரிய முடியுமா?
‘ஆம்’ என்ற நம்பிக்கையும் உறுதிப்பாடும் மிகுந்த பதிலை முன்வைக்கிறது அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனனின் ‘யோகமும் இயற்கையும்’.
பன்னாட்டுப் பெருநிறுவனமொன்றின் மேலாண் இயக்குனராகப் பணி புரிந்த அனுபவம், கல்விப்புலம் சார்ந்த சூழலியல் ஆய்வாளர் என்ற பரிமாணம், பரம்பரையாக வாய்த்த மரபுவழி மருத்துவ அறிவின் செழுமை, இயற்கை வேளாண் துறையில் தொழில் முனைவு - இத்தனைக்கும் மத்தியில் இடையறாத யோக சாதனை மற்றும் அண்டி வந்த யோக சாதகர்களுக்கான வழிகாட்டல் என்ற விதமாகத் தனது வாழ்வை அமைத்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அந்தந்தக் காலத்து நகர்வுகள் சார்ந்தும் பொதுவாகவும் எழுதிய எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு ஒரு தொகுதியாக வெளிவருகின்றன.
உலகியல் நெருக்கடிகள் ஒருபுறமும் ஆன்ம ஈடேற்றத்துக்கான தாகம் மறுபுறமுமாக ஊசலாடிக் கொண்டிருக்கும் நம் காலத்து மனித மனதில் தோன்றக்கூடிய பல்வேறு கேள்விகளுக்குமான பதில்களை - மதம், சடங்கு, சம்பிரதாயம் என்ற மேலோட்டமான மழுப்பல்களைத் துணைக்கு அழைக்காமல் - ஆழமானதும் அறிவார்ந்ததுமான பகுப்பாய்வின் வழி முன்வைக்கிறது இந்நூல்.