நூல் பற்றி:
படைப்பினதும் படைப்பின் வழியாகத் தோன்றிய பிரபஞ்சத்தினதும் சூட்சுமங்களை பாரதத்தின் ஞான மரபு பல்லாயிரம் ஆண்டுகளாக அகவயமான தேடலின் வழியாகக் கண்டடைந்திருக்கிறது என்பதற்கு நம் மத்தியில் அவதரித்து வாழ்ந்த ஞானியர் தொகை சான்று. அத்தகையதோர் ஞானியர்கோன் மாணிக்கவாசகர். பிறருக்குப் பிண்டமாகத் தோன்றும் மனித உடல் யோகியருக்கு அண்டமாகவும் யோக சித்தி எய்துவதற்கான தோணியாகவும் எப்படிப் பயன்படுகிறதோ, அதேபோலவே அவர்களது வாய்மொழியும் சாதாரணமாகப் பார்க்கும்போது ஒரு பொருளையும் தியான சாதனை கைகூட நோக்கும்போது வேறோர் ஆழ்ந்த பொருளையும் உணர்த்தும் விதமான சூட்சுமங்களைக் கொண்டுள்ளது.
இதுவரை மாணிக்கவாசகரை ஒரு சிவபக்தர் என்ற அடிப்படையிலேயே, அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். ஆனால், உண்மையில் மாணிக்கவாசகரது சிவபுராணம் சீவன் சிவமாகும் இரகசியத்தை கூறும் யோக ஞானப்பாடல் என்பதை இந்த நூல் விரித்துரைக்கிறது. தமிழ்ச் சித்தர் மரபு ’உயிரே கடவுள், உடலே கோவில்’ என்ற உபதேசத்தினூடாக, எமக்குள் இறைவனைக் கண்டு பேரின்பம் பெறுவதையே வலியுறுத்தி வந்துள்ளது. ஒவ்வொருவருக்குள்ளும் உயிராகிய சிவம் புருவமத்தியில் இருந்து உடலை இயக்கி வருகிறது என்பதை, மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் உணர்த்தும் விதம் இந்த தியான அனுபவ விளக்கத்தில் துலக்கமாகிறது.
யோக சாதகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட ஸ்ரீ ஸக்தி சுமனனின் ‘அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்’ ஐத் தொடர்ந்து யோகானுபவ விளக்க நூல் வரிசையில் அவரது இரண்டாவது படைப்பாக சிவ யோக ஞானத் திறவுகோல் தற்போது வெளிவருகிறது.
ஆசிரியர் பற்றி:
ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள் குடும்ப வழி அகத்திய மகரிஷியை குருவாகக் கொண்டு நுவரெலியா காயத்ரி பீடம் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளிடம் காயத்ரி தீக்ஷையும் பல்லாண்டுகாலம் உடனிருந்து குருசேவை செய்து காயத்ரி சாதனையும், பின்னர் விசாகப்பட்டினம் தேவிபுரம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரிடம் கௌல சம்பிரதாய ஸ்ரீ வித்யா பூர்ணாபிஷேகமும் பெற்றவர். இல்லறத்திலிருந்துகொண்டு தேவி உபாசனையின் மூலம் யோக சாதனை செய்து வருகிறார். சித்தர்பாடல்களின் யோக ஞான விளக்கத்தினை தனது தியானசாதனை அனுபவத்தின் மூலம் எழுதி வருகிறார். கற்க விருப்பமுள்ள சாதகர்களுக்கு தனது அறிவினையும், அனுபவத்தினையும் எழுத்துமூலமும், கலந்துரையாடல்கள் மூலமும் பகிர்ந்து வருகிறார். தனது இளமானி, முதுமானிப் பட்டப்படிப்பை சூழலியல் விஞ்ஞானத்தில் பூர்த்தி செய்துள்ளார். பல்தேசியக்கம்பனியில் துணை இயக்குனராக பணியாற்றி 2018ம் ஆண்டு பணியைத் துறந்துவிட்டு இயற்கை விவசாயத்தில் ஆய்வும், திட்டங்களும் முன்னெடுத்து வருகிறார்.