குருநாதர் பல்வேறு பைரவ ஸாதனை முறைகளை அருளி காலபைரவ ஸாதனையை கால பைரவ க்ஷேத்திரமாகிய காசியில் பூர்த்தி செய்யச் சொன்னார். அவர் கூறிய வாக்கின் படி காசி யிற்குச் சென்று காலபைரவர் ஸன்னதியில் அமர்ந்து துரிய சந்தி எனப்படும் நடு நிசி பூஜையுடன் உள்ளே சென்று செந்தூரம் சாற்றப்பட்ட காசி காலபைரவரது தரிசனமும், அங்கிருக்கும் அஷ்ட பைரவ சன்னதியும், மணிகர்ணிகைக் கரையில் ஸம்ஸானத்தில் அமர்ந்து ஸாதனை புரியும் வாய்ப்பும், காசிவிஸ்வ நாதர், அன்னப்பூரணி அருளும், விசாலாக்ஷி அம்மனுக்கு கைகளால் அபிஷேகம் செய்து யம ராஜர் யக்ஞம் செய்த தர்ம ராஜ குண்டத்தில் புரச்சரண யக்ஞம் பூர்த்தி செய்யும் வாய்ப்பும் குருவருளால் வாய்த்தது. 400 ஆண்டுகளுக்கு முன்னர் எமது முன்னோர்களில் ஒருவரான மாதகல் மயில்வாகனப்புலவர் காசியாத்திரை செல்லும் முன்னர் சிதம்பரம் சென்று அங்குள்ள நடராஜர் மேல் யமக யாப்பில் புலியூரந்தாதி பாடி பின்னர் காசி சென்று வந்தார். சிதம்பரம் ஸ்வர்ணாகர்ஷண பைரவ க்ஷேத்திரம்: காசி காலபைரவ க்ஷேத்திரம்; இங்கு தரப்பட்டிருக்கும் சஹஸ்ர நாம ஸாதனை காலபைரவர் மற்றும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆகிய இரு ரூபங்களை துதிக்க வல்ல சஹஸ்ர நாமம் என்று குறிப்பிடப்படுகிறது. 2023-ஆம் ஆண்டு காலபைரவாஷ்டமி தொடங்கி ஒவ்வொரு நாளும் காலபைரவ தியானம் எழுதத் தொடங்கினோம். இதைப் படித்து பலரும் பலன் பெற்ற நிலையில் இந்த தொடர் 54ஆவது பகுதியில் இருந்து ஸ்வர்ணாகர்ஷண பைரவ நாமாவளி யாக அனைவரும் பயிற்சி செய்யும் படி முழு ஸாதனையும் 2024 சிவராத்ரி அன்று பஞ்சாக்ஷர ஸஹித ஸ்வர்ணாகர்ஷண பைரவ ஸாதனை முறையாக ஸாதகர்களுக்காகத் தொகுத்துள்ளோம்.